Thursday, April 7, 2016

கொஞ்சம் கவிதைன்னு சொல்லுங்க

தாயுமானவன்

பசியடங்கிய பிள்ளையின்
புன்முறுவலில்
ஊட்டி விட்ட
அப்பா அம்மாவானான்.


உண்மை

பூத்துக்குலுங்கும் பூக்களாய்
பொய்யிலாப் புன்னகையில்!
மழலைகள்!!


அம்மா

குளித்தப்பின்
சிலுப்பி விட்ட தலையில்
நீர்த்திவலைகளை
கண்ட அம்மா
கடிந்து கொண்டே
துவட்டி விட
இன்னும் குளுமையானது.


தாம்பத்யம்

நிலா எங்கே
கேட்டான் பெயரன்
இதோ இருக்கிறது
உன் தாத்தன் தலையில்
என்றாள் கிழவி
பொங்கிய சிரிப்பில்
மிளிர்ந்தது தாம்பத்யம்.


ஆசான் என்னும் அன்னை

விம்மி விம்மி
உதடு மடித்து
கண்கள் மிரண்ட
பிள்ளையின்
கை பிடித்து
அ அம்மா
என்று
அன்போடு
சொல்லித்தந்தார்
ஆசான் என்னும் அன்னை!


இணைய காதல்

பேஸ்புக்ல் காதலித்தவளை
வாட்ஸ்அப் காரன் கொண்டு போக
இன்ஸ்டாகிராமில் பைத்தியமானவன்
கூகுளில் மீண்டும் தேடினான். 🤓

முயற்சி

கனவை விதைத்து விடு!
காலம் கை கூட்டும்!!
உழைப்பு நீர் ஊற்றி
புத்தி உரமிட்டு வா,
வெற்றிப்பழம் உனக்கே கிட்டும்!!!.

Monday, November 18, 2013

நவீன கட்டைப்பஞ்சாயத்துக்கள்

யார் இவர்கள்?!

இன்றைய தினம் புதியதாக சில நவீனமான கட்டைப்பஞ்சாயத்துக்கள் தொலைகாட்சிகளில் நடக்கின்றன. கிராமங்களில் நடப்பது போலவும், நீதிமன்றங்களில் வழக்கு விசாரிக்கபடுவது போலவும் இந்த நிகழ்ச்சிகளிகளில் அலசி ஆராயப்படுகின்றன.  இவர்களுக்கு யார் இந்த அதிகாரங்கள் கொடுத்தது?

குறிப்பாக ஒரு தொலைகாட்சியில் நடிகையும் இயக்குனருமான ஒருவர் பிரித்து மேய்கிறார். மன் றொன்றில் பிரபல (முன்னாள்) செய்தி வாசிப்பாளினி ஒருவர் அலசி ஆராய்கிறார். மூணாவதில், அபத்தமாக பிரபலமடைந்த ஒரு சாமியார் தீர்ப்பு சொல்லி ஆசியும் வழங்குகிறார்.

இந்த நிகழ்சிகளில் குறிப்பாக பிரள்காதல், காதலித்து கைவிடப்பட்டது, பலதார மணங்கள் போன்றவை தான் அதிகமாக விசாரிக்கப்படுகிறது. (அப்பொழுதான் மக்கள் பார்ப்பார்களாம், டி.ஆர்.பி. கூடுமாம்). இச்சமுதாய சீர்கேடுகளை, ஒரு வலிமை மிக்க ஊடகத்தில் விவாதித்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் என்ன நன்மை கிடைக்க போகிறது?

இந்த நிகழ்ச்சிகள் நேர் ஒளிபரப்பாக நடைபெறுவதாக சொல்லபடுகின்றன. ஆனால் இவை ஏற்கனவே பலதினங்கள் பதிவாக்கப்பட்டு, என்ன ஒளிபரப்பினால் மக்களால் பார்க்கப்படுமோ அவை மட்டுமே வெட்டி ஒட்டப்பட்டு வழங்கப்படுகிறது.  ஒரு வீட்டுக்குள் அல்லது ஒரு கோர்ட்டிற்குள் விசாரிக்கப்பட வேண்டிய விசயங்கள் அருவருக்கத்தக்க வகையிலே அரங்கத்தில் அம்பலமாக்கபடுகின்றன. 

நீதிமன்றகள் தானாக முன்வந்து இந்த நிகழ்ச்சிகளை தடை செய்யுமா?




Monday, November 4, 2013

வனவாசத்திருக்குப்பின் வைகைப்புயல் வடிவேலு

மூன்று வருட வனவாசத்திருக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மீண்டும் நடித்து வருவது வாழ்த்திற்குரியது. ஒரு நல்ல கலைஞன் தன் திறமையை பயன்படுத்த முடியாமல் இருட்டடிப்பில் இருந்து பின் மீண்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் கடந்த சில தினங்களாக அவர் தனது தொழில் முறை போட்டி நகைச்சுவை நடிகர்களை விமர்சித்து வருவது ஏற்புடையது அல்ல. எல்லா நடிகர்களிடமும் நிறைகுறைகள் உள்ளது. இவர் இல்லாத தற்போதைய நகைச்சுவை நடிப்பை பார்த்து கண்களைக் கெடுத்து கொள்ளாதிர்கள் என்று கூறுகிறார். ஆனால் இவர் நடித்ததிலேயே நிறைய விரசமான காட்சிகள் உள்ளது. போட்டியாளர்களை இவர் வாழ்த்தித்தான் தானும் வளர வேண்டும்.

இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை திரைத்துறையின் மீது உள்ளது. வடிவேலுவும் இத்தகைய ஒரு நெருக்கடியில்தான் வனவாசத்தில் இருக்கிறார். அவர் படம் இன்னும் வெளி வர வில்லை. வந்தால்தான் மறுவாழ்வு நிஜம். ஆகவே சக நடிகர்களை அவர் விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல.




கிழட்டுப்புலிகளும் புள்ளி மான்களும்.

கடந்த இரண்டு தினங்களாக செய்திகளில் அடிபட்டு வருவது மலையாள நடிகை ஸ்வேதாமேனன் விவகாரம். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு மக்கள் பிரதிநிதியால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விசயத்தை  ஸ்வேதா மேனன் துணிச்சலோடு புகாராக தெரிவித்தது பாராட்டுக்குரியது. (அதை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல என்றாலும்)

அந்த கிழட்டு அரசியல்வாதிக்கு 73 வயதாம். முதலில் அறிக்கை மூலம் மறுத்தது, ஆனால் அந்த கிழட்டுப்புலி வரம்பு மீறியது ஊடகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றி வேறு மனிதர்கள் இல்லாமல் இருந்திருந்தால் பாலியல் வன்கொடுமையே நிகழ்த்தியிருக்கும். ஐந்து லட்சம் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இப்புலிதான் இருக்கிறது. எதற்கும் சபாநாயகர் இப்புலியின் இருக்கைக்கு அருகில் மகளிர் உறுப்பினர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது.